தற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள் தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளமையினால், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது.
ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent resident) பெடரல் அரசு கட்டுப்படுத்தினால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என Desjardins (டெஸ்ஜார்டின்ஸ்) என்னும் கனேடிய நிதி அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் மூத்த இயக்குநரான Randall Bartlett (ராண்டால் பார்ட்லெட்) வெளியிட்ட அந்த அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருப்பதால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை இயல்பாகவே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதைய கணிப்புகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2024 இல், 0.1 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை முற்றிலுமாக நிறுத்தும் வகையில் புதிய கொள்கைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், 2024 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 0.7 சதவிகிதமாக குறையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தகைய நடவடிக்கை, நாடு மந்த நிலையிலிருந்து மீண்டெழுவதையும் பாதிக்கும் என்றும், அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அது வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது