குற்றசெயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நெதர்லாந்துப் பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபர் நேற்று (19.05.2024) கைது செய்யப்பட்டார்.
போலிக்கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, உள்ளிட்ட ஆள்மாறாட்டம் செய்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கடவுச்சீட்டில் நெதர்லாந்துக்குச் சென்று அங்கு குடியுரிமையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, சகோதரி 2019ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது அவரது பெயரில் முன்னரே கடவுச்சீட்டு எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வெளிநாட்டில் இருந்தமையால் அவர் நாடு திரும்பிய பின்னர் நடவடிக்கை எடுப்பதற்காக சகோதரி காத்திருந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி வைப்பகப்புத்தகம் பெற்றமையையும் சகோதரி அறிந்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் இந்த மாதம் தாயாரின் இறுதிக்கிரியைகளுக்காக நெதர்லாந்திலிருந்து சகோதரி யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.
இதையடுத்து யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.