யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவரே நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் கடையில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலும் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளின் பின்னர், சம்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள, சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிகோரி நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சந்தேக நபரிடம் போதைப்பொருளை வாங்கி வந்தவர்கள் என்பவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.