Tamil News Channel

படுகொலை  செய்யப்பட்ட இளைஞனுக்கு  நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மறுநாள் கனடா செல்ல  தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலாமாக மீட்கப்பட்ட மல்லாவி  யோகபுரம் பகுதியினை சேர்ந்த  ஆனந்தராசன் சஜீவன் அவர்களின் மரணத்திற்கு  நீதி  கோரி மல்லாவி  பகுதியில் பொதுமக்கள்  பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டிருந்தது .

19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் , பொலிசாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் , துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்று குறித்த  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

மல்லாவி  மத்திய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது .

இதேவேளை குறித்த  போராட்த்திற்கு ஆதரவாக  இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன

பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடிய மக்கள் வீதியை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை , சம்பவ இடத்திற்கு  வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் , குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் , இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார் .

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீத்தியின் முன் நிறுத்தா விடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,போலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள  பாராளுமன்ற  உறுப்பினர் சாந்தி  ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர்  போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர் .அவர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது .

போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts