பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர் 171 நாட்கள் உயிர் வாழ்ந்தார் — மருத்துவத்துறையில் புதிய முன்னேற்றம்!
உலகிலேயே முதல்முறையாக பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட 71 வயது முதியவர் 171 நாட்கள் உயிர் வாழ்ந்தது மருத்துவத் துறையில் பெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சீனாவின் அன்ஹய் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் 2024 மே மாதத்தில் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சை, உறுப்பு மாற்று மருத்துவத்தில் புதிய பாதையைத் திறந்துள்ளது.
ஹெபடைடிஸ் பி மற்றும் பெரிய கல்லீரல் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளிக்குச் மனித கல்லீரல் மாற்று சாத்தியமில்லாத நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட 11 மாத பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டது.
நோயாளியின் கல்லீரலில் இருந்த கட்டி அகற்றப்பட்டு, மீதமுள்ள பகுதியில் பன்றியின் கல்லீரல் இணைக்கப்பட்டது. அது மிகச் சிறப்பாக செயல்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பன்றியின் கல்லீரலின் உதவியுடன் நோயாளர் 38 நாட்கள் உயிர் வாழ்ந்தார், பின்னர் மனித கல்லீரல் போதுமான அளவு செயல்பட்டதும் பன்றியின் கல்லீரல் அகற்றப்பட்டது.
இருப்பினும், 171 நாட்களுக்குப் பிறகு இரைப்பை குடல் ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்தார்.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது,
“கல்லீரல் என்பது பல முக்கிய செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் உறுப்பு என்பதால், அதை மாற்றுவது இதயம் அல்லது சிறுநீரகம் போல எளிதல்ல. ஆனால் இந்த முயற்சி, மனிதனுக்குப் பன்றியின் கல்லீரல் பொருந்தும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது.”
மனித உறுப்புகளுடன் பன்றியின் உறுப்புகள் நன்கு ஒத்துப் போவதாகவும், இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளிலும் இதேபோன்ற முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவ சாதனை, எதிர்காலத்தில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
![]()