July 18, 2025
பரா ஒலிம்பிக்கில் இலங்கையரின் சாதனை..!
Sports புதிய செய்திகள்

பரா ஒலிம்பிக்கில் இலங்கையரின் சாதனை..!

Sep 3, 2024

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து  தனது  தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்துள்ளார்.

போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02.09) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வெற்றிபெற்றுள்ளார்.

தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஜப்பானின் கோபி விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் F64 வகைப்படுத்தில் பிரிவு ஈட்டி எறிதலில் 66.49 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து  F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான  உலக சாதனை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு பராலிம்பிக்கில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்திருந்தார்.

டோக்கியோ 2020 பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

சமித்த துலான்  கொடிதுவக்கு  தனது முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்திருந்தார். ஐந்தாவது முயற்சியில் உலக சாதனை நிலைநாட்டிய அவர், கடைசி முயற்சியில் 64.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *