தென்கொரியாவுக்கு பலூன்களில் குப்பைகளை வட கொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் செவ்வாய்க்கிழமை (28) இரவு முதல் புதன்கிழமை (29) காலை வரை 150 க்கும் அதிகமான இராட்சத பலூன்கள் குப்பைகளை சுமந்தவாறு வட கொரியாவில் இருந்து வந்ததை அவதானித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த செயல் வட கொரியா அதன் தெற்கு அயல் நாடுகளுடன் மோதுவதற்கு ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு இராட்சத பலூன்கள் மற்றும் சிறிய பலூன்கள் சுமந்து வந்த பொதியில் பிளாஸ்டிக் துண்டுகள், காகிதத் தாள்கள் அடங்கிய குப்பைகள் வீதியில் நடைபாதையில் கிடக்கும் புகைப்படங்களை தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்கொரியா தெரிவிக்கையில் “வட கொரியாவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், நமது குடிமக்களின் பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்துவதாகவும் உள்ளது”. “வட கொரிய பலூன்களால் எழும் அனைத்துப் பொறுப்பும் வட கொரியாவைச் சார்ந்தது. மேலும் வட கொரியாவின் மனிதாபிமானமற்ற மற்றும் கீழ்நிலை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம்.” என தெரிவித்துள்ளது.
தென்கொரியா அரசாங்கம் வடக்கு ஜியோங்கி மற்றும் கேங்வோன் மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பலூன்கள் விமான நிலையங்கள் மற்றும் அதிவேக வீதிகளை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாட்டை “கருத்து சுதந்திரம்” என வடகொரியாவின் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் “அவர்கள் எப்போதும் செய்யும் சில விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம், ஆனால் அவர்கள் ஏன் நெருப்பு மழையால் தாக்கப்பட்டதைப் போல பெரிய விடயமாக கருதுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.