வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு, வடமத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னதாகவே எடுக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.



