இலங்கையின் நீதி அமைச்சர் இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் மத்திய வங்கி உட்பட அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீக்கி, அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் நாடாளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு அண்மையில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு ரத்து செய்யப்படும் என்றும், எனினும்; நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து நியாயமான சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்ட யோசனையின் கீழ், அரச நிறுவனங்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் மற்றும் நிதிக் கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்படும்.
அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அதிகாரங்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில்; அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதன் மூலம் அவர்களில் பலர் நாடாளுமன்ற அதிகாரங்களை புறக்கணிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்கிழமை விளக்கமளிக்கப்படவுள்ளன.
இதனை தொடர்ந்து ஏனைய அமைச்சர்களும் நாடாளுமன்ற நிதி அதிகாரங்களை பேணுவது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளனர் என்றும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.