பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த வன்முறையில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
2021க்குப் பிறகு PoK பகுதியில் எழுந்துள்ள மிகவும் கடுமையான அமைதியின்மைக் சூழ்நிலையாக இது கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அரசு 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதைக் தொடர்ந்து தொடங்கிய போராட்டம், தற்போது இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள்இயக்கமாகத் தலைதூக்கியுள்ளது.
முசாபராபாத், தீர்கோட், தத்யால் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், சந்தைகள், கடைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் மட்டுமின்றி, பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் தீவிர நிலைமையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வியக்கத்தை “ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி” (JAAC) என்ற அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இஸ்லாமாபாத் அரசு, பிராந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதையும், போராட்டங்கள் தொடர்ந்து பரவிவருவதையும் காணலாம்.







