
பாங்கொக்கில் இலங்கை எழுச்சி – தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களால் தொடரும் சாதனைகள்!
தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான தாய்லாந்து பகிரங்க சுவட்டு, மைதான சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த வெற்றிநாளாக அமைந்தது.
இதில் இலங்கை 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் கைவசப்படுத்தியது.
ஆண்கள் 1500 மீட்டர் ஓட்டத்தில் ருசிரு சத்துரங்க 3 நிமிடங்கள் 53.30 விநாடிகளில் நிறைவு செய்து இலங்கைக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார்.
பெண்கள் நீளம் பாய்தலில் நெத்மிக்கா மதுஷானி ஹேரத் தனது 6.37 மீட்டர் பாய்தலால் தங்கம் வென்றார்.
தனது முதல் இரண்டு முயற்சிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நெத்மிக்கா அடுத்த நான்கு முயற்சிகளில் தொடக்கமாக 6.16m, 6.30m, 6.24m மற்றும் இறுதியில் 6.37 மீட்டர் பாய்தல்களை மேற்கொண்டார்.
இவரது 4வது முயற்சியான 6.30 மீட்டர் தங்கத்துக்கு தகுதியானதாக இருந்தபோதிலும், இறுதி முயற்சி அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகப் பதிவானது.
மேலும், மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்சன், ஆண்கள் 1500 மீ. ஓட்டத்தில் 3 நிமிடங்கள் 54.72 விநாடிகளில் முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பெண்கள் 1500 மீ. ஓட்டத்தில் டபிள்யூ. கே. எல். ஏ. நிமாலி 4 நிமிடங்கள் 32.39 விநாடிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளியை பெற்றார்.
இதனுடன்,பெண்கள் 100 மீ. தடங்கள் ஓட்ட தகுதியில் வத்சலா ஹப்புஆராச்சி 14.28 விநாடிளுடன் முறையே இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளியை பெற்றார்.
இதற்கிடையில், பெண்கள் 100 மீட்டர் தகுதிச் சுற்றில் அமாஷா டி சில்வா (12.11 விநாடி) முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.