வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
ஜக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இந்த விசேடகூட்டம் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று (05.06.2024) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது , பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள கட்டியெழுப்புவது தொடர்பாகவும் மக்களை இயல்புவாழ்க்கைக்கு கொண்டுவருவது தொடர்பிலும் அமைச்சரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலைகளை சீரமைப்பதற்கும் கட்டடங்களை புணர்நிர்மாணம் செய்வதற்கும் நிவாரணப்பணிகளுக்கான உதவிகளையும் ஒதுக்கீடுகளையும் அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
முப்படைகள், பொலிஸ் , சிவில்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட, பிரதேச செயலகங்களூடாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரினால் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய ஜக்கிய நாடுகள் , சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் நன்றி பாராட்டினார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவது தொடர்பில் குறித்த அமைப்புக்களும் நிறுவனங்களின் அதிகாரிகளும் தங்கள் விருப்பங்களை வெளியிட்டனர்.
இந்த கலந்துரையாடலில் அனர்த்தமுகாமைத்துவ நிலைய அதிகாரிகள் UNICEF, உலக சுகாதர நிறுவனம், செஞ்சிலுவை சங்கம், World Vision, ஜக்கிய நாடுகளின் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.