கம்பளை நகரத்தின் அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனின் பெற்றோர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் விடுமுறைக்காக கம்பளை பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது இந்த சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சிறுவனின் தாய் கடைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய தாய், சிறுவன் வீட்டில் இல்லாததை அவதானித்துள்ள நிலையில் பிரதேசவாசிகளின் உதவியுடன் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, இந்த சிறுவன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் சிறுவனை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னரும் இந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண் ஒருவரும் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.