Tamil News Channel

Blog Post

Tamil News Channel > அரசியல் > பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அஜித் பி பெரேரா!

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அஜித் பி பெரேரா!

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது.

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன.

இந்நிலையில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு அஜித் பி பெரேராவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *