பிரித்தானிய பொது தேர்தல் இன்றைய தினம்(04.07) இடம்பெற்று வருகின்றது. உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணி முதல் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் ‘இது மாற்றத்திற்கான நேரம்‘ என்ற முழக்கத்துடன் களமிறங்கிய தொழிலாளர் கட்சி கருத்துக்கணிப்பில் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஆளும் கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி இந்த பொது தேர்தலுடன் முடிவுக்கு வரும் என அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில், வழமைக்கு மாறாக இந்தப் பொது தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பலர் போட்டியிடுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் மற்றும் டெவினா போல், கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன், த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா–ராஜன், லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றானர்.
இதேவேளை, இந்த தேர்தலில் பிரித்தானியாவில் உள்ள இந்துக்களின் செல்வாக்கு மாற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில் உள்ள மூன்றாவது பெரிய மதக் குழுவான இந்துக்கள் ஏற்கனவே அங்கு செல்வாக்கு மிக்க சமூகமாக உள்ளனர்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிரித்தானியாவில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் இன்று இடம்பெறும் பொது தேர்தலில் வாக்காளர்களாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து மக்களின் வாக்குகளை கவர இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இந்து கோவில்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அண்மையில் வெளியிடப்பட்ட இந்து சமூகத்தின் அறிக்கை இந்து வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் இங்கிலாந்தில் அவர்கள் வைத்திருக்கும் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.