காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காஸாவின் டெய்ர் அல் – பாலா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் சுமார் 90 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் மேலும் 88 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், முகமது அபுவெல் கோமசன் என்பவர் பிறந்து நான்கு நாட்களேயான அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக அரசாங்க அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். இதன்போது அபுவெல் தங்கியிருக்கும் அல் – பாலா நகருக்கருகில் சிலர் குண்டு வீசியுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக வீடு சென்று பார்த்தவர், அங்கே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகள், மாமியார் ஆகியோர் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
குழந்தைகள் பிறந்ததைக் கொண்டாடுவதற்குக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லையே எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இதுவரையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் 115 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.