முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசுவமடு – இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் இந்நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை (15) குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் குழந்தையை புதைத்த இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்றைய தினம் (19) சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
குழந்தையை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து சில தடயப்பொருட்களை மீட்டுள்ளதாக நீதிபதியிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.