November 18, 2025
பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு – பிரதமர் ஹரிணி அமரசூரியா!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு – பிரதமர் ஹரிணி அமரசூரியா!

Oct 13, 2025

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்கும், அவற்றை நடைமுறைச் செயல்பாடாக மாற்றுவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று (13) நடைபெற்ற பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டம் 2025 தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

“1995ஆம் ஆண்டு பெய்ஜிங் பெண்கள் உலக மாநாட்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, பாலின சமத்துவத்திற்கான அந்த விரிவான கட்டமைப்பை நாம் இன்னும் பயன்படுத்தி வருகிறோம். கல்வி, சுகாதாரம், மற்றும் பெண்களின் ஆயுட்காலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளில் இன்னும் கடுமையான இடைவெளிகள் உள்ளன,”என பிரதமர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“பெண்களின் வளர்ச்சி என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூக மற்றும் கலாச்சார துறைகளில் முழுமையான செயல்முறையாகும். இதற்காக நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.”

இலங்கையின் தேசிய உறுதிப்பாடுகளை வலியுறுத்திய பிரதமர், CEDAW மற்றும் UNSCR 1325 உடன் இணங்க,

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசிய கொள்கை,

பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயல் திட்டம் (2023–2027)
எனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அனைத்துத் துறைகளிலும், அனைத்து சமூகப் பின்னணிகளிலிருந்தும் பெண்களுக்கு அர்த்தமுள்ள பிரதிநிதித்துவம் கிடைக்க இலங்கை உறுதியாக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார். CNCC-க்கு வருகை தந்த அவரை, ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் வரவேற்றனர்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் முதல் பெண்மணி நடத்திய அதிகாரப்பூர்வ விருந்திலும் பிரதமர் கலந்து கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *