பெண் ஒருவரது நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று பிற்பகல் (03) கினிகத்ஹேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கினிகத்ஹேனையைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், சந்தேக நபர் முன்னர் முறைப்பாட்டாளரை திருமணம் செய்திருந்ததாகவும், பின்னர் சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.








