பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அமைச்சரவையின் அவதானம்…
சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை மனித தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான விடயங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு தேவையான புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (10.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அனைத்து அரசு ஊழியர்களும் வரி செலுத்துவோரின் பணத்திலேயே ஊதியம் பெறுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை கூடிய போது, இந்த பாரிய வேலை நிறுத்த போராட்டம் பற்றி நிறைய பேசப்பட்டது.
மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரவு-செலவுத் திட்ட ஆவணம் இந்த நாட்டின் அன்றாட அலுவல்களை நடத்துவதற்கு போதிய அரச வருமானம் இன்றி மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான முறையில் பணத்தை ஒதுக்கியுள்ள வேளையில், இந்த வருடத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதைவிட அதிகமான நிதித் தொகையை வழங்குவதற்கு இலங்கை அரசிடம் எந்த அமைப்பும் இல்லை. ஏனெனில் 20,000 ரூபாவால் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு மேலதிகமாக 400 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
இந்த கூடுதல் தொகையை வழங்க, குறைந்தபட்சம் வட் வரியை 21 வீதமாக உயர்த்த வேண்டும். ஏனெனில் அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், மானியம், வட்டி போன்றவற்றை ஈடுகட்ட போதுமான அரசு வருவாய் இல்லை.
அத்துடன் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளரும் இவ்வாறான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு இந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு இல்லை என மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தால் பாடசாலைகள் மூடப்பட்டதால், இன்று ஏராளமான குழந்தைகள் பாடசாலை கல்வி உரிமையை இழந்துள்ளனர்.
அத்துடன், பிள்ளைகளின் கல்வியை இழப்பது போன்ற பொதுச் சேவைகளைப் பெறுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சில சட்டப்பூர்வ வழிகளைப் பெறுவதற்கான சட்ட வரைவுகளைத் தயாரிக்க முடியும் எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இந்நாட்டில் பொதுச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொதுமக்களின் நலனுக்காகவும் ஏனைய பொதுமக்களின் நலனுக்காகவும் சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் உருவாக்கப்படும்.” என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()