கொஸ்கொட, அக்கடிகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பொலிஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வலானா ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் மஹா இந்துருவ பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த தயாராகிக் கொண்டிருந்தபோது இடைமறிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் “லொக்கு பட்டி” மற்றும் “கரந்தெனிய சுத்தா” என்ற பாதாள உலக நபர்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையிலான மோதலுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் லொக்கு பட்டி குழுவுடன் தொடர்புடையவர்கள் என்றும், கரந்தெனிய சுத்தா குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவரை குறிவைத்து தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் லொக்கு பட்டியின் சகோதரரான “பொடி பட்டி” என்று அழைக்கப்படுபவர் அக்டோபர் 1 ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளது.
குறித்த கொலைக்கு பதிலடியான நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








