பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த வாகன சாரதி…!
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பாலத்தடியில் வைத்து இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வான் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மீராவோடை வசிப்பிடமாகக் கொண்ட ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய மாணவன் சப்றாஸ் மஹ்தி ( வயது 08) கடந்த சனிக்கிழமை இரவு 07 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய வான் சாரதி தப்பிச் சென்றதுடன், கடந்த மூன்று தினங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இதனையடுத்து கண்காணிப்புக் கெமராக்கள் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலையைசேர்ந்த வான் சாரதி முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()