நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்தில், (2025 அக்டோபர் 30 முதல் இன்று வரை) நடத்தப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் இது குறித்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்களில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் உள்ளடங்குவது குறிப்பாக கவலைக்குரிய விடயம் என தெரிவித்தார்.
உலக சிறுவர் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், 2025 அக்டோபர் 30 முதல் நேற்று வரை, பல்வேறு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை நாம் கைது செய்ய வேண்டியிருந்தது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.
இந்த எண்ணிக்கையில், 8,932 பேர் ஆண் இளைஞர்கள், 173 பேர் இளம் பெண்கள், மற்றும் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








