காசா பிராந்தியத்தின் மிகப் பெரிய வைத்தியசாலையை இஸ்ரேல் முற்றுகையிட்டதையடுத்து, காஸா போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை குழப்புவற்கு இஸ்ரேல் சதி செய்கிறது என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களை தான் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை காஸாவின் அல் ஷிபா வைத்தியசாலை முற்றுகையின்போது, ஹமாஸின் டசின் கணக்கான தலைவர்கள் கொல்லப்பட்டனர் எனவம், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவிததுள்ளது.
இந்நிலையில், கட்டாரை தளமாகக்கொண்ட, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே இது தொடர்பாக கூறுகையில், அல் ஷிபா மருத்துவ வளாகத்தில் ஸியோனிஸ படைகளின் நடவடிக்கையானது, காசாவில் வாழ்க்கை சூழல் மீளத் திரும்புவதை தடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
பொலிஸ் அதிகாரிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் வேண்டுமென்றே இலக்கு வைப்பதானது குழப்பங்களையும் எமது மக்களிடையே வன்முறைகளையும் ஏற்படுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
டோஹாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை குழப்பும் முயற்சியையும் இது வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.