மலேசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2வது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் 2025 ஜனவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெற உள்ளது. ஐசிசி நடாத்தும் மகளிருக்கான போட்டித் தொடரொன்றை மலேசியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
தென் பசுபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளில் ஒன்றான சமோவா தீவுகள் முதல் முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரொன்றில் விளையாட உள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தற்போது 14 அணிகள் இறுதியாகியுள்ளன. இன்னும் இரு அணிகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய தகுதிச்சுற்று வாயிலாக இணையவுள்ளன.
எனவே, 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.
இதன்படி, குழு Aஇல் நடப்புச் சம்பியன் இந்தியா, மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், குழு Bஇல் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும், குழு C இல் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, சமோவா தீவுகள், ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று அணி ஆகிய அணிகளும், குழு D இல் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஆசிய தகுதிச் சுற்று ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மலேசியாவை ஜனவரி 19ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து 21ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுடனும், 23ஆம் திகதி இந்தியாவுடனும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.