Tamil News Channel

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர்; ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்!

WhatsApp Image 2024-07-09 at 18.11.02_8b8d598d

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தொண்டமானாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

60 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டடம் அமைந்துள்ள 12 பரப்புக் காணி அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய ஆளுநர் அவர்கள்,

“மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட ஆயுர்வேத சித்த மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனூடாக இப்பகுதி மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என நம்புகின்றேன்.  இந்த கட்டடத்தை நிர்மாணிக்க மக்களாக முன்வந்து தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டுள்ளமை வடக்கு மாகாணத்திற்கே சிறந்த முன்னுதாரணமான  செயற்பாடாகும். மக்கள் அரச உத்தியோகஸ்தர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்காகவே அரச சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமைய, மக்களிடமிருந்து விலகி நிற்க ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை.

மேலும் வைத்திய நிபுணர்களின் வெளியேற்றத்தால் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய சவாலுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது. தாதியர் பயிற்சிகளுக்கு எமது பகுதிகளில் இருந்து ஒருவரும் செல்வதில்லை. இந்நிலையில் வைத்தியசாலைகளில் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் தமது கவலை நிலைகளை தெரிவித்து தினமும் என்னை சந்திக்க வருகின்றனர். எனினும் மாகாணத்தின் அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காக அவர்களின் குரலுக்கு செவிசாய்க்காது திருப்பி அனுப்பிய சந்தர்ப்பங்களே அதிகம்.

வடக்கு மாகாணத்தில்  138 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சிடம் ஆட்கள் இல்லை. இவ்வாறான பல சவால்களுக்கு மத்தியிலேயே எமது சுகாதாரத்துறை இயங்குகின்றது.  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அரச உத்தியோகஸ்தர்கள் சேவையாற்றுகின்றனர். ஏதேனும் சேவைகள் உரிய முறையில் கிடைக்காவிடின் எங்களை சந்தித்து அவற்றிற்கான உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளாரென எமது பிரந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts