மட்டக்களப்பில் போத்தலில் அடைத்து தரமற்ற நெய் விற்பனை செய்த கம்பனி முகவர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த தரமற்ற சத்துமா கம்பனி உரிமையாளர் ஆகிய இருவரையும் 76 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் நேற்றுமுந்தினம் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து இரு பொருட்களையும் வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.
மட்டக்களப்பு வலையிறலு பிரதேசத்திலுள்ள கடை ஒன்றில் விற்பனை செய்துவந்த இதயம் ஸ்ரோர் என்ற லேபிலிட்ட போத்தலில் அடைத்து விற்பனை செய்துவந்த நெய்யை கடந்த மாதம் புளியந்தீவு பிரதேச பொதுசுகாதர பரிசோதகர்கள் அதனை கைப்பற்றினர்.
அதேவேளை மட்டு கோட்டமுனை பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு பொலித்தீனில் அடைத்து விற்பனை செய்யப்பட்டுவரும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் ஆறுமாத குழந்தைகளுக்கான சத்துமா தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அதனை கைப்பற்றிய பொது சுகாதரா பரிசோதகர்கள் குறித்த இரண்டு பொருட்களையும் அரச இராசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் நெய்யில் கலக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறமான மற்றனிக் ஜெலோ என்ற மனித பாவனைக்கு உதவாத தரமற்ற மஞ்சள் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாகவும்,சத்துமாவில் அதிகமான அல்ரோஸ் டொக்கினிக் என்ற பதார்தம் அதிகளவு கலக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரு பொருட்களும் மனித பாவனைக்கு தரமற்றது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இருவருக்கும் எதிராக தனிதனியாக பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்குதாக்குதல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நெய் விற்பனை முகவரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும்,சத்துமா உற்பத்தி உரிமையாளரை 26 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.