மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் விசேட யுக்திய நடவடிக்கையில் கஞ்சா, சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற பிடியாணை உட்பட 7 பேரை நேற்று (12) கைது செய்துள்ளதுடன் 5 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு 20 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் 2ம் கட்ட யுக்தியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதை பொருள் வியாபரிகளினது வீடுகளை முற்றுகையிடும் நடவடிக்கையினை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.பி.ஆர். பண்டார தலைமையில் நேற்று அதிகாலை 3.00 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரையிலான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஊறணி அம்பிறோஸ் வீதியிலுள்ள போதை வியாபாரிகளின் வீடுகளை முற்றுகையிட்ட போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடனும் கசிப்பு தயாரித்த ஒருவரை 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவுடனும் 5 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அனைவரையும் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.