Tamil News Channel

மதங்களையும், இனங்களையும் பிரிப்பதற்கு அரசியலை நான் ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன் ;நாமல்!

வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க மாட்டோம். அத்தோடு, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கிண்ணியா நகர சபை நூலக மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுனவின் மூதூர் தொகுதி இணைப்பாளர் இப்ராஹிம் சதா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் இப்போது எல்லா சமூகங்களும், இனங்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் ஒன்றை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். எனவே இந்த நாட்டை பிரித்து, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்க முடியாது. இதன் காரணமாக நாங்கள் வட மாகாணத்தோடு, கிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்கமாட்டோம்.

நான் ஒரு பௌத்தன். இதன் காரணமாக ஏனைய மதங்களை நான் மதிக்கின்றேன். இஸ்லாமியர்களும், இந்துக்களும் தங்களுடைய மார்க்க வழிபாடுகளை இந்த நாட்டில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கும் அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளுக்குமான தேவையான பாதுகாப்பை புதிய அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்துவேன் என உறுதி அளித்தார்.

மதங்களையும், இனங்களையும் பிரிப்பதற்கு அரசியலை நான் ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன். நீங்கள் என்னை நம்புங்கள்.

சிலர், உங்களிடம் இருந்து எங்களை பிரிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டை பிரித்தவர்கள். நாங்கள் நாட்டை பிரிப்பதற்கு அரசியல் செய்ய வரவில்லை. நாங்கள் நாட்டை ஒன்று படுத்தியவர்கள். எனவே, என்னை நம்புங்கள். நான் பொய்யை கூறி உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. செய்ய முடியுமானவற்றை செய்ய முடியும் என்று கூறுகிறேன். செய்ய முடியாதவற்றை செய்ய முடியாது என்று கூறுகின்றேன். உண்மைதான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.

இங்கு கூடியிருக்கின்ற அனைத்து இளைஞர்களும் சமூக வலைத்தளங்களோடு, என்னுடன் தொடர்பில் இருப்பவர்களே எனவே எனது முற்போக்கான சிந்தனைகளும், இந்த நாட்டுக்கான எனது எதிர்கால வேலைத் திட்டங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள்.

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், இந்தப் பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு அபிவிருத்திகளை செய்திருக்கிறோம். 30 வருட காலமாக பல துன்பங்களை அனுபவித்து வந்த உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தோம். யுத்தத்தை முடித்தது மாத்திரமன்றி, தொழில்துறைகளையும் உங்களுக்கு கொண்டு வந்து, உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts