எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியை சேர்ந்த நான்கு நாட்டுப்படகு மற்றும் 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் இறங்கியும் பாம்பன் பாலத்தில் சாலையை மறித்து அமர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 300க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை நெடுந்திவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு நாட்டு படகு மற்றும் 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேஷன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் மீனவர்கள் தெரிவிக்கும் பொழுது ராமேஸ்வரம் கடற்கரை மிகவும் குறுகிய கடற்கரை இந்த கடற்கரையிலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் பொழுது இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளை கைது செய்வது மீனவர்களை சிறை பிடிப்பது தொடர் வாடிக்கை நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
இந்த கைது நடவடிக்கை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை பாம்பன் மீனவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.