இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், மத்திய வங்கி அறிக்கையில் வெளியிடப்பட்ட சனத்தொகை தரவை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
வட மாகாணத்திற்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் பெரும் முரண்பாடு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி அறிக்கை வட மாகாணம் தொடர்பாக முற்றிலும் தவறான தரவை வழங்குகிறது. வடக்கின் சனத்தொகை 557,000 என்று அதன் அறிக்கையில் கூறப்படுகிறது,
எனினும் உண்மையான எண்ணிக்கை அதை விட இரண்டு மடங்குக்கும் அதிகம்” என சுமந்திரன் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமந்திரன் பகிர்ந்த கண்ட்ரி ப்ரோஃபைல் 2025 (Country Profile – 2025) அட்டவணையில், இலங்கையின் மொத்த சனத்தொகை 21.756 மில்லியனாகவும், வட மாகாண சனத்தொகை 557,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அட்டவணையில் ஏனைய மாகாணங்களின் சனத்தொகை,
மேல் மாகாணம் 6.104 மில்லியன், மத்திய மாகாணம் 2.712 மில்லியன், தென் மாகாணம் 2.603 மில்லியன், கிழக்கு மாகாணம் 1.784 மில்லியன், வடமேல் மாகாணம் 2.583 மில்லியன், வடமத்திய மாகாணம் 1.406 மில்லியன், ஊவா மாகாணம் 1.401 மில்லியன், சப்ரகமுவ மாகாணம் 2.012 மில்லியன் என பட்டியலிடப்பட்டுள்ளது.
எனினும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2024-ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பின்படி, வட மாகாண சனத்தொகை 1,150,148 ஆகும், இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 5.3% ஆகும்.
இதேவேளை சனத்தொகை கணக்கெடுப்பின் பிரிவின்படி:
யாழ்ப்பாணம் 594,751, மன்னார் 123,756, வவுனியா 172,312, முல்லைத்தீவு 122,619, கிளிநொச்சி 136,710 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 557,000 என்ற எண்ணிக்கை, சமீபத்திய உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவான வட மாகாண சனத்தொகையில் பாதிக்கும் குறைவானதாகும் என தெரிவித்துள்ளார்.








