மன்னார் நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் (07.08)  நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள்  அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(02.08) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் அத்துமீறி  நுழைந்து கடமைக்கு  இடையூறை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம்(07.08) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அர்ச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் நீதிமன்றில்  முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நீதவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் பிணையில் வைத்தியர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நீதிமன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேற்றனர். பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மன்னார்  – தம்பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார். குறித்த  இளம் தாய் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார்  மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூறு  ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here