மருத்துவமனையில் செல்ஃபி, நீதிமன்றத்தில் வாதம் – ரணில் வழக்கில் புதுப் பரபரப்பு!
பொது நிதியைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதாகக் கூறப்படும் வழக்கு நேற்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பின் வழக்கறிஞர் திலீப் பீரிஸ்,ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் “தமனி அடைப்பு ஏற்பட்டது” எனக் கூறி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதையும்,
அதற்கான மருத்துவ அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவர்களுடன் செல்ஃபி எடுத்ததும், புத்தகங்கள் வாசித்ததும், பலருடன் தொலைபேசியில் உரையாடியதும்,
அவரது “மோசமான உடல்நிலை” குறித்த கூற்றுக்கு முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
திலீப் பீரிஸ் மேலும் கூறியதாவது,
“இவர் ஒரு சாதாரண சந்தேகநபர் அல்ல 36 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாக பயன்படுத்தியவர்” எனவும்,
பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரினார்.
இதற்கு எதிர்வாதமாக ரணில் விக்கிரமசிங்க தரப்பின் சட்டத்தரணி திலக் மாரப்பன,
அவரது சேவை பெறுநர் கைது செய்யப்பட்டபோது உணவோ தண்ணீரோ எதையும் எடுத்துக்கொள்ளாததால் உடல்நிலை மோசமடைந்தது, அதனால் தான் ICU-வில் அனுமதிக்கப்பட்டார் என விளக்கமளித்தார்.
நீதிவான் நெத்திகுமார விசாரணையின் போது, “நீங்கள் முன்பு அவரின் நிலை உயிருக்கு ஆபத்தானதாகக் கூறவில்லைவா?” எனக் கேட்டபோது, மாரப்பன பதிலளித்ததாவது — “ஆம், தமனி அடைப்பு இன்னும் உள்ளது; தற்போது இரத்தம் மாற்றுப் பாதை வழியாக பாய்கிறது” என தெரிவித்தார்.
அனைத்து விளக்கங்களையும் கேட்ட பிறகு நீதிவான் குறிப்பிட்டதாவது,
முன்னாள் நீதவான் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து பிணை வழங்கியதால் அந்த உத்தரவை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யாது எனத் தெரிவித்தார்.
இருப்பினும், மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து எழுந்த சந்தேகங்களை கருத்தில் கொண்டு, அவை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதை விளக்குமாறு மருத்துவர்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]()