இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம், ஹர்தயா பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையொன்றில் பெண் ஒருவருக்கு மருத்துவமனை ஊழியர் அறுவை சிகிச்சை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை நடைபெறும் அறையில் மயக்க நிலையிலிருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து அதனை காணொளியாக எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர்.
இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஊழியர், மருத்துவமனை இயக்குநர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின் வழியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் கூறியதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளதோடு, இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
உயிர் காத்துக் கொள்வதற்காகத்தான் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்திற்கொள்ளாது இதுபோன்ற செயல்கள் நடப்பது ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துவதோடு, மக்களுக்கு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையும் குறைவடைந்துவிடும்.
சிகிச்சை முறை குறித்து சரிவர விளக்கமில்லாத ஒரு ஊழியர், இவ்வாறு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டமை கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும் எனவும் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.