மறைந்த ஆர்.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து இலங்கையர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தலைவர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரிக்கப்படாத இலங்கைக்கான விடயத்தில் ஆர்.சம்பந்தனும் தானும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் ஆர்.சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இரா.சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது வருத்தத்தை தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தன் தொடர்ச்சியாக வாதிட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தனின் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பிரதமர் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
சம்பந்தன் தமிழ் சமூகம் மாத்திரமன்றி அனைத்து இலங்கையர்களின் கவலைகளையும் நிவர்த்தி செய்வதன் மூலம் உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நீதிமன்ற சவால்கள் எவ்வாறான போதிலும், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.