முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடு, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார என்பவரால், நேற்று (22) இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:
“அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நாமல் ராஜபக்ஷ சமர்ப்பித்த சொத்து விவரங்கள் சந்தேகத்துக்குரியவையாக உள்ளன. அவரது சொத்துக்கள், அவர் அறிவித்த அளவைவிட அதிகமாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயரிலும் சொத்துக்கள் இருக்கலாம் என்பதால், ஆணைக்குழு அதனை விசாரிக்க வேண்டியது அவசியம்.”
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில்,
விஜேராம மாவத்தையில் உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தைப் புனரமைக்க ரூ.510 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பில் ரூ.360 லட்சத்திற்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதற்கான நிதி ஆதாரம் சந்தேகத்துக்கு இடமளிக்கின்றது.
“இவர்கள் அரச நிதியை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளார்கள். இதன் விளைவாக நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே, உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என ஜாமுனி காமந்த துஷார வலியுறுத்தினார்.







