முல்லைத்தீவு – மாங்குளத்தில் நேற்றிரவு (25.06) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஏ-9 வீதியின் பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது.
இதன்போது நிறுத்தப்பட்ட பஸ்ஸின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் மேலும் இரு பயணிகளும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பயணிகள் இருவரின் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பஸ்ஸின் நடத்துநரும் மற்றுமொருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.