இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வீதியில் போராடுவற்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர அவர்களின் வெளிப்படையில்லாத் தன்மையே காரணமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்கக் கூடாது.
பெற்றோலியம் மற்றும் மின்சார சபை அமைப்புகளின் வருமானம் மற்றும் செலவுகளை பொறுத்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
ஆனால் இன்று இலங்கை மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்கள் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பிரதான காரணம் காஞ்சன விஜயசேகரயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேலதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபக் நிறுவனத்திற்கு ஒரு ரூபாய் கூட பணம் அற விடாமல் இலவசமான முறையில் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் மின்சார சபையிலே நிறைவேற்று பணிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையிலே மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்களோ அல்லது வேலை செய்பவர்களோ தொழிற்சங்க நடவடிக்ககைகள் தொடர்பாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிட கூடாது என குறிப்பிட்டார்.
மின்சார சபையிலே வேலை செய்கின்ற ஊழியர்களை அடக்குமுறைக்குள்ளே கொண்டு செல்கின்றார்கள் ஒருவருக்கும் தெரியாமல் தாங்கள் செய்யப் போகின்ற ஊழல் மோசடிகளுக்கு இவர்கள் வாய் திறக்க கூடாது என்று குறிப்பிடுகின்றார்கள்.
இலங்கை மின்சார சபையிலே இருக்கின்ற ஊழியர்கள் உண்மையான நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் நாங்கள் எங்கு சென்று அறிவது.
இவற்றைவிட, பல கோடிக் கணக்கில் வைப்பில் பணம் உள்ளவர்களிடம் வரி அறவிடாமல் இலகுவாக கஷ்டப்பட்ட மக்கள் மீது வரியை அரசாங்கம் அதிகரித்திருக்கின்றார்கள்.
இதற்கு எமது மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள்.
இதிலே மட்டக்களப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிராக வாக்களித்தவன் நான் ஒருவர் மட்டும்தான்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.