வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணையை மீள செலுத்தும் முறையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாடுகளுக்கு தெரிவித்திருக்கிறார்.
அதனால் அந்த முறையை யாராவது மாற்றியமைக்க முயற்சித்தால் மீண்டும் நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதனால் எமது நாட்டை சர்வதேச ரீதியில் மேலோங்கச்செய்ய ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதே நாட்டு மக்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பாகுமென தெரிவித்துள்ளார்.
இன்று சில அரசியல் தலைவர்கள் பல்வேறு விடயங்களை தெரிவித்தாலும் ரணில் விக்ரமசிங்க பயணிக்கும் பாதையை தவிர வேறு பாதை இல்லை. ரணில் விக்ரமசிங்க பயணிக்கும் பாதை சர்வதேசமும் வரவேற்றிருக்கிறது. எதிர்க்கட்சி அரசியல் வாதி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது செல்லும் இந்த பாதையை மாற்றியமைப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு செய்ய முடியாது.
ஏனெனில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜைகா நிறுவனம், இந்தியா போன்ற அனைத்து நாடுகளும் நாங்கள் பயணிக்கும் பாதைக்கு ஆதரவளித்திருக்கின்றன.
இந்த நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை செலுத்தும் முறையை ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
அதனை யாராவது மீறினால், நான் உட்பட அனைரும் மீண்டும் வீதியில் பிச்சை எடுக்க வேண்டி வரும் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.