தமிழகம் – நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும், அடையாளம் தெரியாத தமிழ் பேசும் ஆசாமிகயே நடுக்கடலில் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம், செருத்தூர் சிங்காரவேலர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நால்வர் ஃபைபர் படகில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை, கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் சென்ற தமிழ் பேசும் குழுவினர் அவர்களை அணுகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தங்களின் பகுதியில் எல்லை மீறி மீன்பித்ததாக கூறி தமிழக மீனர்கள் மீது இரும்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க மூவர் கடலில் குதித்ததுடன், ஒருவர் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், மொபைல் போன்கள், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கிகள் மற்றும் பிற பொருட்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வேதாரண்யம் மரைன் பொலிஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கண்டித்துள்ளார்.
“தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கவும், காயமடைந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.