மீன்பிடித் துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பும் நலனும் அரசின் முதன்மை பொறுப்பாக இருப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற 2026 வரவு–செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் கடல்வளம் மற்றும் மீன்பிடித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையின் கடற்றொழில் துறை இன்னும் பழமையான நிலையில் உள்ளது. ஆழ்கடல் உட்பட மீன்பிடி படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழையவை. இதனால் ஆழ்கடல் மீன்பிடியில் நம்பிக்கை குறைந்து வருகிறது.
நவீன படகுகள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் தேவையை அரசு உணர்ந்து வருகின்றது.
2025 வரவு–செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்கான கூடுதல் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக 1,000 மில்லியன் ரூபா மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாள 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித் துறைக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
வடமாநிலத்தில் மயிலிட்டி உட்பட முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ரின் மீன் தற்போது இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. கருவாடு, மாசி உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட உப்பு பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் ஒருங்கிணைப்பில் கடந்த வாரம் நடைபெற்ற பிரமாண்ட கண்காட்சியின் மூலம் இலங்கையின் கடல்வள திறன் சர்வதேச கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மீனவர்களின் உண்மையான பிரச்சினைகள் எமக்கு தெரியும்; அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நேரடியாக மீனவ கிராமங்களுக்கு சென்று மேற்கொண்டு வருகிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)
![]()