17வது பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
மொத்தமான 170 நாடுகளில் இறுதி பதக்க பட்டியலில் 85 நாடுகள் இடம்பிடித்துள்ளன.
கடந்த மாதம் 28ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,463 வீர, வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதி நாளின் இறுதி போட்டியாக அரங்கேறிய பளுதூக்குதலில் (107 கிலோ உடல் எடைப்பிரிவு) ஈரான் வீரர் அஹமட் அமின்ஜேடே தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து இரவில் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இறுதியில் தீபம் அணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கொடி 2028-ம் ஆண்டு பாராலிம்பிக்கை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.
‘பறக்கும் மீன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் சீன நீச்சல் வீராங்கனை ஜியாங் யுஹான் 7 தங்கப்பதக்கத்தை வென்றார். நடப்பு ஒலிம்பிக்கில் வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வந்த 19 வயதான இவர் சிறு வயதில் கார் விபத்தில் சிக்கி வலது கை மற்றும் வலது காலை இழந்தவர் ஆவார்.