இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது பதவிக்காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் துறையினர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், மூன்று நாட்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது வேறு எவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது வரையில் யாருக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கத்தரப்பு தெரிவிக்கவில்லை.






