முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள குருந்தையடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவின்போது, தேரில் பொருத்தப்பட்டிருந்த கலசம் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (வெள்ளி) கோலாகலமாக நடைபெற்ற இத்தேர்த்திருவிழாவின் போது தேரில் பொருத்தப்பட்டிருந்த கலசம் மின் இணைப்பு கம்பியில் சிக்கி கழன்று விழுந்ததால் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் இதன்போது மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினைச் சேர்ந்த 55 வயதுடைய சங்கரப்பிள்ளை சசிகலா என்ற பெண் உயிரிழந்ததுடன் 58 வயதுடைய பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரதீபன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.



