அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில், ரிவர் நார்த் (River North) பகுதியில் உள்ள ஆர்டிஸ் ரெஸ்டாரண்ட் அண்ட் லாஞ்ச் (Artis Restaurant and Lounge) வெளியே கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை நடைபெற்றதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு 11 மணி அளவில் ஒரு இருண்ட வண்டியில் வந்த 03 பேர், காரிலிருந்து வெளியேறாமல் கூடியிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சம்பவத்தின்போது மக்கள் குழு, சிகாகோ ரேப்பர் மெல்லோ பக்ஸின் (Mello Buckzz) ஆல்பம் வெளியீட்டு விழாவிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் 25 வயதான லியான் ஆண்ட்ரூ ஹென்றி (Leon Andrew Henry), 23 வயதான டெவோண்டே தெரெல் வில்லியம்சன் (Devonte Terrell Williamson), 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்கள். (நோர்த்வெஸ்டேர்ன்) Northwestern மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அந்த இருவரும் உயிரிழந்தனர்.
காயமடைந்தோர் 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் இல்லினாய்ஸ் மேசோனிக் (Illinois Masonic), Mt. சினாய் (Mt. Sinai), ஸ்ட்ரோகர் (Stroger) மற்றும் நோர்த்வெஸ்டேர்ன் மெமோரியல் (Northwestern Memorial) மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நால்வர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சிகாகோ பொலிஸ் ஆணையாளர் லாரி ஸ்நெல்லிங், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என உறுதி செய்துள்ளார். இரண்டு விதமான குண்டு சில்லைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதை கும்பல் வன்முறையுடன் தொடர்புபடுத்த முடியுமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் இருந்தாலும், பொலிஸார் அதற்கும் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மேயர் பிராண்டன் ஜான்சன், இது போன்ற சம்பவங்கள் திரும்பவும் நடைபெறக்கூடாது என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும், இதற்கான பொறுப்பாளிகளை கண்டறியாமல் விடமாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார். அவர் மேலும், இது ஒரே இரவில் நடந்த ஒரே கூட்டு துப்பாக்கிச் சூடு அல்ல என்றும், மற்றொரு சம்பவம் சிகாகோவின் ரிவர்டேல் பகுதியில் நடந்ததாகவும் கூறினார்.
ஆர்டிஸ் லாஞ்ச் உரிமையாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், இது ஒரு பாதுகாப்பான இடமாக உருவாக்கப்பட்டு, பன்முக சமூகங்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றும், இந்த வன்முறை அதனை மிகவும்தீவிரமாக பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கு பிறகு, நகர நிர்வாகம் அந்த வணிக வளாகத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளது. பொலிஸார் அந்த இடம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன், 2022ம் ஆண்டு இதே இடத்தில் குஷ் லௌங்கே (Hush Lounge) என்ற பெயரில் செயல்பட்டபோது ஏற்பட்ட ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் பலரும்காயமடைந்தனர். அதன் பின் அந்த விடுதி மூடப்பட்டது. பின்னர் தான் “ஆர்டிஸ்” என்ற பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பொலிஸார் 3 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்புகின்றனர். அதிகாரிகள் தற்போது நுட்ப விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தினைத் தொடர்ந்து, வன்முறைத் தடுப்புப் பணியாளர்கள், பொதுமக்களில் இருந்து தகவல்களைப் பெறும் நோக்கில் ஆர்டிஸ் லாஞ்சின் அருகே ஒன்றுகூடியுள்ளனர்.
இந்த துயரான சம்பவம், சிகாகோவின் நகர அமைதி மற்றும் சமூக பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்புகிறது.



