எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இக் கருத்தை கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னமோ, மொட்டு சின்னமோ அல்ல, பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமானால் அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சியில் கலந்துரையாடல் இல்லை எனவும் நாமல் ஜனாதிபதி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.