யாழ்ப்பாணத்தில் பரவி வரும் இனந்தெரியாத காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக (05) அதிகரித்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டொக்டர் சத்தியமூர்த்தி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாக தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் 20 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுவாக எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் என சந்தேகிக்கப்படுவதால், நோயறிதலை உறுதிப்படுத்துவதற்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டொக்டர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அடையாளம் காணப்படாத நோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன், நோயின் சரியான தன்மையை கண்டறிய விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் டொக்டர் வீரகோன் மேலும் தெரிவித்தார்.