November 18, 2025
யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஆள்மாறாட்டம்
புதிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஆள்மாறாட்டம்

Jul 3, 2024

வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமான காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார்.

காணி உரிம மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து, அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஆள்மாறாட்டம் செய்து, சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்த போது தான் நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *