January 23, 2026
யாழ். மாவட்ட ரீதியாக சாதனை படைத்த வஜீனாவுக்கு ஊர் திரண்டு விழா எடுத்த நெகிழ்ச்சி!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

யாழ். மாவட்ட ரீதியாக சாதனை படைத்த வஜீனாவுக்கு ஊர் திரண்டு விழா எடுத்த நெகிழ்ச்சி!

Jun 8, 2024

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த மாணவி நேற்றைய தினம், அவர் கல்விகற்ற பாடசாலையான யாழ்ப்பாணம்  பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியர்கள்,  சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்று  ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்துள்ளார்.

அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்துள்ளார்.

குறித்த மாணவி மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கல்வி கற்பதற்கு வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்று தரையில் இருந்தே கல்வியினை கற்று இந்த நிலையை அடைந்துள்ளார். இச் செய்தியை எமது பிராந்திய நிரூபர் எமக்கு வழங்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *