ஜனாதிபதியாக நீடிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர்மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை. அதுதான் உண்மை, அதனால், அடுத்த தேர்தலை ஓரு வருடத்திற்கு தள்ளி வைத்து, நாட்டை மீட்டுக் கொண்டுவருவதற்கு அவருக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் அரசியலமைப்பை மாற்ற முடியாத காரணத்தினால், தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் ஒரு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இது தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும். அநுரகுமார திஸாநாயக்க ‘திருடர் திருடர்’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர பொருளாதார மறுசீரமைப்புக்களை கொண்டு வரமாட்டார்.
ஆனால் அதைவிட தகுதியானவர் யாராவது இருந்தால் எனக்குக் காட்டுங்கள். தற்போதைய ஜனாதிபதி நாட்டுக்காகப் பல விடயங்களைச் செய்துள்ளபோதும் இந்தப் பணிகள் அனைத்தும் பூரணமாக முடிவுக்கு வரவில்லை. இதனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் அவகாசம் வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.